<img src="mu-varatharasan.jpg"alt="varatharasan">
                                         தங்கைக்கு -மு.வரதராசன் 

இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றில் தவிர்க்கமுடியாத பெயர் மு.வ.வரதராசன்.இவர் ஆற்றிய தமிழ் இலக்கிய பணியானது,சொல்லில் அடங்காதது.மு.வ எனும் பெயர் தமிழ் பேசும் நல்உலகெல்லாம் காலம் கடந்தும் கொண்டாடப்படுகிறது.இவர் எழுதிய நூல்களோ நூற்றுக்கும் மேற்பட்டன.அவற்றுள் செந்தமிழ் தேனை சுவைச் சொட்ட சொட்ட கடிதங்களாக வடித்திருக்கும்  நூல்  "தங்கைக்கு".

புதிதாக இல்லற வாழ்க்கையில் இணைந்த தன் அன்பு தங்கைக்கு அவள் இல்வாழ்க்கையில் சிறந்து விளங்க அண்ணன் வளவன் எழுதும் அன்பு கலந்த அறிவுரை கடிதங்களாக அமைகிறது இந்நூல்.

கடிதங்களோ "கற்பனைக் கடிதங்கள்"! 

ஆனால்,கற்பனை என்பதைத்  தாண்டி,ஒரு அண்ணனின் அன்பையையும், அக்கறையையும்,பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தும் அற்புத கடிதங்கள்.இல்லற வாழ்க்கைக்கான  அறிவுரைகளும் வாழ்வியல் தத்துவங்களும் பொதிந்துள்ள இக்கடிதங்கள்,ஒருவர் "வையத்துள் வாழ்வாங்கு வாழ"வழிக்காட்டுவதற்காக எழுதியதாக மு.வ. அவர்கள் முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.


கடிதங்கள் ஒரு பார்வை 

  • கடிதம் 1: ஒரு பெண்ணின் இல்வாழ்க்கையானது வளர் பிறை போல வளர்ந்து ஒளி வீச உபாயம் சொல்லும் கடிதம் இது.கணவனும் மனைவியும் கிழவனும் கிழவியுமாக முதுமையுற்ற காலத்திலும் அன்பில் சிறந்து பண்பை காக்கும் வழிமுறையை விளக்குகின்றார்.
  • கடிதம்2: தங்கையின் வேண்டுகோளுக்கிணங்க,தனது வாழ்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் வளவன்.பழங்கால பெண்களை போல அடங்கி நடப்பது நல்லதா?இக்கால பெண்களைப் போல உரிமையுணர்ச்சியோடு வாழ்வது நல்லதா?என்ற தங்கையின் வினாவுக்கு பதில் கடிதமாக இக்கடிதம் அமைகிறது.
  • கடிதம் 3 : பெண் உரிமை,மணமுறிவிற்கான காரணங்கள்,குறைகளை நிறைகளாக காண்பதன் அவசியம் மற்றும் விட்டுக்கொடுத்தலின் இன்பம் என்பவற்றை விளக்குகிறார்.
  • கடிதம் 4: இக்கடிதம் இல்வாழ்க்கையில் சமத்துவத்தின் அவசியம்   பற்றியும்,எளிமையான வாழ்க்கையின் முக்கியத்துவம் பற்றியதாக அமைகிறது.
  • கடிதம் 5:சமூகத்தில் பெண்களின் நிலை,வறுமை,அமைதியான வாழ்கைப் பற்றிய அறிவுரைகள் பற்றி விளக்குகிறார்.
  • கடிதம் 6: ஒரு பெண் நல்வாழ்க்கை நடத்திக்காட்டுவது சுற்றியுள்ள பல பெண்களுக்கு எடுத்துக்காட்டாக அமைவது எப்படி?ஒரு குடும்பத்தின் நல்ல வாழ்க்கை முறை என்பவற்றைப் பற்றி எழுதிய கடிதம் இது.
  • கடிதம் 7: கணவனும்,மனைவியும் புரிந்துணர்வோடு வாழ்தல்,பிறர் உள்ளம் அறிந்து நடக்கும் கலை,மனப்பொருத்தம் பற்றிய அறிவுரைகள் அடங்கியது.
  • கடிதம் 8:வெளியுலக தொடர்புகளின் மத்தியிலும் இரு மனம் பொருந்தி வாழ்தல் மற்றும் கணவனோ மனைவியோ தன் குறை அறிந்து திருந்தி வாழ்தலின் அவசியம் பற்றிய விளக்கி உரைக்கிறார்.

நூலின் சிறப்பம்சம் 

  • கடிதங்களில் சிலப்பதிகாரம்,திருக்குறள்,நாலடியார்,காந்தியடிகளின் வாழ்கை என சிறந்த பல எடுத்துக்காட்டுக்கள் அடங்கியிருப்பது சிறப்பு.            
  • கடிதங்களில்,தன்  தங்கையின்  பதில் கண்டு அவளின் சந்தேகங்களை தீர்க்கும் படியாக,அவளின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து வளவன், பதில் கடிதம் எழுதியிருப்பது சிறப்பு.
  • கடிதங்கள் அனைத்தும் வெறுமனே அறிவுரை கடிதங்களை இன்றி, அனைத்து வாசகர்களுக்கும் உதவும்  நற்சிந்தனைகள் அடங்கியிருக்கிறது.


நூலில் எனக்கு பிடித்த வரிகள் 

  • "எவ்வளவு பழமை ஆன போதிலும் சிறப்பு குன்றாமல் ஒளிவிடும் வாழ்க்கை தான் நல்ல வாழ்க்கை"
  • "அடங்கி வாழலாம் ஆனால் பிறருடைய அடக்கு முறைக்கு அஞ்சி இரையாக கூடாது".
  • "எப்போதும் அன்புக்கு விட்டுக்கொடுத்து வாழக் கற்று கொண்டால் யாரும் அடிமை ஆகாமலே வாழ்கை நடத்த முடியும்".
  • "அன்பான வாழ்க்கையில் ஒத்த உரிமையுடைய ஒருவரிடம் தோற்றுப்போவது பெருமையாகும்".
  • "பாவங்களில் பெரிய பாவம்,குற்றங்களில் பெரிய குற்றம் எது என்றுக் கேட்டால்,விபசாரம்,கொள்ளை,கொலை என்று எவ்வெவற்றையோ சொல்லமாட்டான்.ஆடம்பர வாழ்க்கை என்ற ஒன்றை தான் சொல்வேன்.கொலை,கொள்ளை என்பன ஒரு சிலரை தான் அழிக்கிறது.ஆனால்,ஒரு சிலருடைய ஆடம்பர வாழ்க்கை எத்தனையோ ஏழை மக்களின் அமைதியான வாழ்க்கையைப் பாழ்படுத்தி அல்லல் விளைவிக்கிறது".
  • உறவுக்கு அவசியம் "மனப்பொருத்தம்".  
  • "கண்டவரோடு எல்லாம் பழகி நட்பை பெருக்க வேண்டாம்"- ஷேக்ஸ்பியர்.

கணவனும் மனைவியும் இல்வாழ்க்கையில் சிறந்து விளங்க மனப்பொருத்தமும் தூய அன்பும் அவசியம்  என்பதை  இந்நூல் சிறப்பாக விளக்குகிறது.மு.வரதராசன் அவர்கள் எழுதிய இந்நூல்,அனைத்து  பெண்களுக்கும் 
சமர்ப்பணம்!!!

நூல்: தங்கைக்கு 

எழுதியவர்:மு.வரதராசன் 

வெளியீடு:பாரி நிலையம்