Advertisement

Responsive Advertisement

செந்தாமரை - டாக்டர் மு.வரதராசன்




நூல் அறிமுகம் 


கணவனை இழந்து,கைப்பொருள் இழந்து,உறவினர்கள் உதறிவிட்ட பின்
தன் எதிர்காலம் இனி என்ன ஆகுமோ என்பதை விட,பெற்ற பிள்ளையின் எதிர்காலத்தை எண்ணியே மனம் உடைந்து போனவள் திலகத்தின் தாய்.வாழ்க்கை மீதான முழு விரக்தியையும் அவள் காண்பித்தது திலகத்தின் மீதுதான்.கெட்ட கிரகம்,தரித்திரம்,சனியன் என்றே சதா காலமும் திலகத்தை சபித்துக்  கொட்டினாள்.சிக்கி கொண்டிருந்த அந்த இருள் நிறைந்த வாழ்க்கையில் இருந்து வெளியேறி, கல்வி கூடத்தில் படிக்கவேண்டும் என்று  திலகம் துணிந்ததெல்லாம் ஒரே காரணத்திற்க்காகத்தான்.அறிவு மங்கி கிடந்த தன் தாயை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்.

கல்விக் கூடத்தில் சேர்ந்துப் படிக்க வேண்டும் என்ற தன் இலட்சியத்தை எப்போதும் கைவிடாத அவள், தன்னந்தனியாக ஆற்காட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறாள் .சென்னையில்  தன் பெரியம்மா மகனான இளங்கோவை சந்தித்து உதவி  பெறுவதே அவளின் ஒரே நம்பிக்கை.திலகம் இளங்கோவை சந்தித்தாளா?சென்னையில் அவள் சந்தித்த செந்தாமரையும், திருநாதனும் அவள் வாழ்க்கையின் வலிகளை மறைக்க எவ்வாறு துணை நின்றார்கள் என்பதுதான் "செந்தாமரை".

மு.வரதராசன் அவர்கள் எழுதிய முதல்  நாவல்  இது.தமிழ் நடை எளிமையும்,நுட்பமும்,தெளிவும் கொண்ட மிக மேன்மையான வாழ்வியல் தத்துவங்களை எடுத்து கூறும்  சிறந்த படைப்பு.பெண் சுதந்திரம்,மூட நம்பிக்கை,சாதி வேறுபாடு, வறுமையின் கொடுமை,காதல், அன்பு, இல்லறம்,பெண்ணியம் என அத்தனையும் பேசுகின்றது.

திலகம், இளங்கோ,செந்தாமரை,மருதப்பன்மற்றும் திருநாதன் ஆகிய ஐந்து முக்கிய கதாபாத்திரங்களும் தத்தமது உணர்வுகளை பேசும் படியாக கதை நகர்வது மிக சுவாரசியம்!


திலகம் 

  • நாவலின் தலைப்பு செந்தாமரை என்றாலும்,திலகமே எனக்கு கதையின் நாயகியாக பரிணமிக்கின்றாள்.பெண் பிள்ளையாய் பிறந்த விட்டதால் பெரும் பாரமாக கருதிய இந்த சமுதாயத்தை  கண்டு அவள்  உடைந்து போகவில்லை.  அனைத்தையும் எதிர்த்து போராட கல்வியே ஓரே ஆயுதம் என்று எண்ணியவள் .உறவுகளால் கைவிடப்பட்ட தனது தாயையையும்,தங்கையையும் காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை.தானே காப்பாற்றவேண்டும் என்று எண்ணி முடிவெடுத்த போது,குடும்ப பாரத்தை சுமந்து தினம்தோறும் போராடும் ஒவ்வொரு பெண்களையும் கண்முன்னே கொண்டு வந்துவிடுகிறார் மு.வ.

  • தன் தங்கை பூங்கொடியை நன்றாக படிக்க வைத்து சிறந்த அறிவாளியாக்க  ஆசைப்படுபவள்.அவளுக்கு தாய் தந்தை தோழி எல்லாமுமாக தானே இருக்கவேண்டும் என்று எண்ணிய திலகம் தன்னலமற்ற சிறந்த சகோதரியாக நம் மனதில் இடம் பிடித்துவிடுகிறாள்.

  • சென்னையில் தனக்கு அடைக்கலம் தந்த அம்மையார், பரத்தையர் குலத்தில் பிறந்தாலும் எத்தனை  உயர்ந்த பண்பாடு பெற்றவர் என்பதை திலகம் எண்ணி வியக்கிறாள்.

      "இரக்கம் மற்றும் உண்மை.இந்த இரண்டு பண்பு உடையவர்களைத் தாழ்ந்த குலத்தார் என்று நினைப்பதும் பாவம் அல்லவா?"  என்று உரைக்கும்      போது,  சாதியை கொண்டு உயர்ந்தோர்,தாழ்ந்தோர் என்பதை அடையாளப்படுத்துவது அறியாமை.நற்குணங்களை கொண்ட மனிதர் எவராயினும் அவரே மேன்மையானவர் என்பதை உரக்க சொல்லும் மு.வ அவர்களுக்கு என் தலை வணக்கம்!





திலகம் திருநாதனை திருமண செய்ய முடிவு செய்த பின் அவள் மன எண்ணங்கள் யாதெனில்,
"உற்றார், உறவினரை விட்டு ஓடிவந்து பழி சுமந்தவள்.அது ஒரு குறைதான்.அதனாலும் நன்மையே விளையும்.இனிமேல் வீண்வம்பு செய்ய மாட்டேன்;ஆர்காட்டில் உள்ள மாமிபோல் ஆரவாரத்தை போற்றமாட்டேன்.அவளை போல் பயனற்ற பண்டிகைகளையும் பண செலவையும் பெருக்கி கணவனை மனம் நோக வைத்து பிறர் மெச்சுவதற்கு ஏங்க மாட்டேன்.கணவனுக்கு ஏற்ற மனைவியாய்,உலகத்தை மதிக்காமல் உள்ளதை மதித்து வாழ்வேன்.எனக்கு ஏற்பட்ட குறையும் பரம்பரைச் செருக்கைப் பாழாக்கி என் கண்ணை திறக்கச் செய்தது" 

எனும் போது வாழ்க்கையின் அனுபவங்களும்,அவமானங்களும் ஒரு பெண்ணை எப்படி பட்டை தீட்டி, அறவாழ்க்கை வாழ்வதற்கு வழி செய்கிறது என்பதற்கு சான்று எனலாம்.திலகம் பெண்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி!



இளங்கோ 

தாய் மீது அளவற்ற அன்பு கொண்டவன், தங்கை மீது பாசத்தில் உச்சம் தொடும் அண்ணன், மருதப்பனின் உற்ற நண்பன்,பல முறை காதலில் விழுந்து தோற்றாலும்,காதலில் என்றுமே நேர்மையானவன்.
சமூகத்தின் அநீதிகளை எதிர்க்கும் முற்போக்கு சிந்தனை வாதி என ஒரு சிறந்த ஆண்மகனின் பண்புகளை கொண்டு செதுக்கிய கதாபாத்திரமாக வலம்வருகிறான்  "இளங்கோ"





"பெற்று வளர்த்த பெண் பிள்ளையை தரித்திரம், சனியன் என்று சொல்பவன் தான் சனியன்,கெட்டவன் என்கிறான் இளங்கோ.பெண்கள் தலை நிமிர்ந்து பேசுவதை, உடன் பதில் சொல்லும் பெண்களை குறை சொல்லும் தன் தாயின் கொள்கைக்கு என்றுமே முரண்பட்டவனாக,மூட நம்பிக்கைககளால்  பெண்களை  அடிமைப்படுத்துவதை  எதிர்பவன்.உண்மையில்,இளங்கோவை போல ஒவ்வொரு ஆணும் இருந்து விட்டால் பெண் அடிமைத்துவம் என்ற பேச்சே இனி இருக்காது என்றே என்ன தோன்றுகிறது.






தன் தங்கை திலகத்தை பற்றி நாக் கூசாமல் பாலி சொன்னவர்களை, குத்தி கொலை செய்யவும் துணிந்த இளங்கோ போன்ற ஒரு அண்ணன் நமக்கும் வேண்டுமே என என்ன தோன்றுகிறது.


தன் தங்கையின் அறிவினை பாராட்டும் இளங்கோ,

"மற்றவர்களை போல தேர்வுக்கு பாடப்புத்தகத்தை படித்து வரி வாரியாக உருப்போட்டு ஒப்புவித்தவளா?அப்படி வாந்தி எடுக்கும் தேர்வுக்கு அவள் படிக்கவில்லை.அவள் நல்ல நூல்களை கற்றிருக்கிறாள்,கற்றவற்றை அறிந்திருக்கிறாள்" எனும் போது  நம் நாட்டின் கல்வி முறையையும், அதன் குறைகளையையும் நூலாசிரியர் உரக்க சொல்லிவிடுகிறார்.

இளங்கோவின் தாய்,திலகத்தை பற்றி அவதூறு  சொன்ன போது,
"பண ஆசை கொண்டோ ,வயிறு வளர்க்கும் கவலை கொண்டோ இழிவான வாழ்க்கையை எண்ணி பார்க்கும் கீழ் மகள் அல்ல.அப்படி அவள் வேசி தொழிலில் இறங்கி விட்டாலும் நான் அவளை பலித்திருக்க மாட்டான்.சுற்றத்தாரை பழித்திருப்பேன்.உலகத்தை பழித்திருப்பேன்.வாழ்க்கையில் நல்ல அமைப்பு இல்லை என்றால் கெட்ட சூழலுக்கு அடிமையாவது யார் குற்றம்? " எனும்  இளங்கோவின் வார்த்தைகள்,நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. 

ஒரு ஆண் மகன் பல சாலியாக, பணம் படைத்தவனாக இருப்பதை விட, இளங்கோ போன்ற மனம் படைத்தவனாக இருக்கவேண்டும்.அதனால் தான் வாசகர்கள் நம் மனதில்  இளங்கோ நீங்கா இடம் பிடித்து விடுகிறான். 







மருதப்பன் 

  • தென்றல் நிலையத்தில் துணை ஆசிரியர். இளங்கோவின் உற்ற நண்பன். மருதப்பன் வாயிலாக இல்லற வாழ்வில் காதலின் மெய்நிலையை சிறப்பாக பேசுகிறார் நூலாசிரியர்.இல்லற வாழ்வின் துயரங்களை, ஊருக்காக ஒருவன் பொய்யாக வாழ்வதை மருதப்பன் மூலமாக சொல்லி விடுகிறார்.

  • திருமணமான தம்பதிகளுக்கிடையே இருக்கும் காதலை அதன் மெய்நிலை யாதென இத்தனை அழகாக எடுத்துரைக்க யாராலும் இயலாது."ஊருக்காக கயிறுகட்டிய பின்னே ஊருக்காகவே வாழ்வதாக அமைகிறது" என்பதெல்லாம் அருமை! அருமை!


1946 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவல் இன்றும் நம் வாழ்க்கையுடன்  தொடர்புறுத்தும் படியாக இருக்க காரணம் இன்றும் அதே மூட நம்பிக்கைகளும்,சாதிய கொடுமைகளும் பெண்ணை அடக்கும் சமூக கோட்பாடுகளும் அப்படியே இருப்பதுதான்.மாற்றங்கள் கண்டோம்,மானிடர்கள் நாம் மேம்பட்டோம் என்றாலும் இன்றளவும் இளங்கோ, மருதப்பன் போன்ற ஆண்களை நம் சமூகத்தில் காண்பது அரிதாகவே இருக்கிறது.





சாதி என்ற பெயரில் அடக்கு முறையும்,ஆணவ கொலைகளும் இன்றும் தொடர்கிறது என்றால் நாம் இன்னும் மாறவில்லை,இந்த சமுதாயமும்  மாறவில்லை என்பதுதான் நிதர்சனம்! 

ஒரு புத்தகத்தை வாசித்தோம் என்று இல்லாமல், அந்த புத்தகத்தின் மூலமாக வாசகர் எண்ணங்களை மேம்பட செய்வதே ஒரு நூலாசியரின் வெற்றி.திரு மு.வரதராசன் ஐயா அவர்கள் அதில் என்றுமே வெற்றிக் கண்டவர்!வாழ்வுக்கான தாத்பரியங்களையும்,அறவழி வாழ்விற்கான அறிவுரைகளையும் கொண்ட செந்தாமரை எனும் நாவல் அனைவரும் வாசிக்க வேண்டிய எனது பரிந்துரை ஆகும்.


டாக்டர் மு.வரதராசன் 
வெளியீடு - பாரி நிலையம் 

Post a Comment

0 Comments