புகைப்படங்கள் - செ .அபிலாஷினி 


<img src="Theru-koothu.jpg"alt="Theru koothu"/>


அறுபத்து ஐந்து வயதில், இன்றும் இளமையுடனும் தன்னம்பிக்கையுடனும் தெருக்கூத்துக் கலையை வளர்க்கும் ஐந்தாவது தலைமுறை குடும்பத்தின் முத்தாய் திகழ்கிறார் "கலைமாமணி"ஸ்ரீ புரசை கண்ணப்பத் தம்பிரான் சம்பந்தன் அவர்கள். துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரைத்  தெருக்கூத்து மன்றத்தை நிறுவி,இந்தியாவின் பல மாநிலங்கள் மட்டுமன்றி கொலம்பியாவின் சர்வதேச மாநாடு வரை தெருக்கூத்து கலையின் பெருமையை முழங்க செய்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்திலிருந்து,120 கி.மி தொலைவில் அமைந்துள்ள புரசை கிராமத்தில் 1953ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் திகதி பிறந்தார். தனது தந்தை மற்றும் குருவான கலைமாமணி கண்ணப்பத் தம்பிரான் அவர்களிடம் பதினான்கு வருடங்கள் கூத்துக்கலையைப் பயின்றார்.

அக்காலக்கட்டங்களிலும்,அதன் பின்பும் தன்னை முழுமையாக இக்கலையில் அர்ப்பணித்துப் பட்டை தீட்டிக்கொண்டதுடன், சிறந்த நாடக இயக்குனர்களான பசில் கோல்(Basil Kaul), படல் சர்காஸ்( Badal Sircas), பீட்டர் புரூக்(Peter brook) ஆகியோரின் பயிற்சிப் பட்டறையிலும்  இணைந்து தேர்ச்சியும் பெற்றார்.

இதிகாசங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர்க்கொடுத்து அர்ஜுனனாக வில் வலைப்பு, துச்சாதனனாக திரௌபதி வஸ்தபரணம், துர்யோதனனாக ராஜ்ய யாகம், கர்ணன் மற்றும் பீமனாக கர்ணமோட்தம், அபிமன்யுவாக வீர அபிமன்யு என பல கதாபாத்திரங்களில் கூத்து கட்டியுள்ளார்.

தான் கற்ற கலையின் புதிய பரிணாம வளர்ச்சியாகவும் சோதனை முயற்சியாகவும் ஜேர்மனிய கவிஞரும், எழுத்தாளரும் நாடக இயக்குனருமான Brecht என்பரின் த காக்காசியன் சார்க் சர்க்கிள் (The Caucasian Chalk circle ) எனும் நாடகத்தை, வெள்ளை வட்டம் என்ற பெயரில் கே.எஸ்.ராஜேந்திரன் இயக்கத்தில் கூத்து வடிவமாக தயாரித்து, அதில் நீதிபதியாக நடித்து புதுமையைப் படைத்தார்.

கொலம்பியாவின் புதின எழுத்தாளரும்,திரைக்கதை எழுத்தாளருமான Gabriel Garcia marqueன் படைப்பான An oldman with huge wings எனும் சிறுதையை கூத்து வடிவமாக மாற்றி " பெரிய சிறகுடைய வயோதிப மனிதன்"எனும் தலைப்பில் Pelayo எனும் கதாபாத்திரமாக நடித்தார்.இது அவராலேயே இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாடகம் 1996ம் ஆண்டு கொலம்பியாவின், பகோடாவில் நடைபெற்ற 5வது சர்வதேச நாடக விழாவில் அரங்கேற்றப்பட்டது சம்பந்தரின் மைல்கல் சாதனையாகும்.


தந்தைவழி பாரம்பரிய கலையை தம் வாழ்வாதார கலையாக ஏற்று, இன்றும் கூத்துக்கலைக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் கண்ணப்ப தம்பிரான் சம்பந்தன் அவர்களுடன்  ஓர் விசேட நேர்காணல்.


1.கூத்துக்கலையின் வளர்ச்சிப்பாதையைப் எப்படி பார்க்கிறீர்கள்?

எனது தந்தை கண்ணப்ப தம்பிரான் அவர்களின் காலத்தில் இக்கலை கிராமங்களில் மட்டுமே ஆடப்பட்டது. கோயில் திருவிழாக்கள், விசேட நிகழ்வுகளான காதுகுத்து,இறந்தவர்களுக்கான மோட்ச நிகழ்வுகள் போன்றவற்றில் மட்டுமே கூத்து நடாத்தப்படும்.இன்று அவ்வாறு மட்டுப்படுத்தப்படவில்லை.நகரங்களிலும், சர்வதேச அளவிலும் கூத்து நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அப்போது தமிழ்நாட்டில் ஐந்து அல்லது ஆறு குழுக்கள் மட்டுமே இருந்தன.இன்று நாற்பதுக்கும் அதிகமான குழுக்களும் பயிற்சி மையங்களும் காணப்படுகின்றன. இதுவே இக்கலையின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகும்.

மேலும், இதிகாசங்கள் மட்டுமன்றி சமூக பிரச்சனைகள் மற்றும் பிற மொழி படைப்புகளையும் மொழிப்பெயர்த்து கூத்து நடாத்தப்படுகிறது.இக்கலையின் வளர்ச்சிப்பாதை இன்று சர்வதேச மட்டத்திற்கு வளர்ந்திருப்பதாகவே  கருதுகிறேன்.



2.பிறமொழிகளில் கூத்தினை அரங்கேற்றும்போது ஏற்படும் சவால்கள் பற்றி?

(சிரித்துக் கொண்டே)நான் 8ம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றேன்.எனக்கு தமிழ் மட்டும்தான் எழுதவும் படிக்கவும் தெரியும்.பிற மொழி படைப்புகளை தமிழில் கூத்தாக மாற்றும் போது பிற மொழி பற்றிய அறிவு மிக அவசியம், மொழி அறியாவிட்டாலும் மொழிப்பெயர்ப்பாளராவது தேவைப்படுகிறார். ஆரம்பத்தில் வெளிநாட்டு பயணங்களின் போது மிகவும் சிரமப்பட்டேன்.

இப்போது எம் குழுவில் உள்ள ஒருவர் எனக்கு மொழி ரீதியான அனைத்து உதவிகளையும் செய்கின்றார்.அவர் ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் ஜேர்மன் மொழிகள் அறிந்தவர்.பிற நாட்டு ரசிகர்களைப் பொருத்தவரை, எம் கூத்தினை காண வருபவர்கள் மொழியினை கடந்து கலையினை ரசிக்கின்றனர்,வரவேற்கின்றனர்.கடந்த ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கூத்திற்கு அரங்கம் நிறைந்த ரசிகர்கள் வந்து எம்மை ஊக்குவித்ததமை அதற்கான சான்றாகும்.



3.மாணவர்களுக்கு கூத்துக்கலையினை கற்றுத் தரும் தமிழகத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக புரிசை கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து பயிற்சிப்பள்ளி திகழ்கிறது.இப்பள்ளியினால் ஆற்றப்படும் சேவைகள் பற்றி?


<img src="Purisai-kannappa-thambiran.jpg"alt="purisai-kannapar">


தந்தை அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் இக்கலைக்காக தியாகம் செய்தவர். அழிந்துக் கொண்டிருக்கும் இக்கலையை மீட்டெடுக்கவேண்டும் என்பதே அவரின் ஒரே கனவு.

ஒவ்வொரு வருடமும் தந்தையின் நினைவு விழாவை திருவிழாவாக கொண்டாடுவது எம் கிராமத்தின் வழக்கம்.அவ்வாறு,2008ம் ஆண்டு தந்தையின் நினைவு விழாவின்போதுதான் இப்பயிற்சிப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.முதன் முதலில், அம்மாணவர்களுக்கு மூன்று மாத பயிற்சியின் பின் இந்திரஜித் எனும் கூத்து அரங்கேற்றப்பட்டது.அதற்கு கிடைத்த பாராட்டு என்னை இன்று வரை இப்பயிற்சிப் பட்டறையை தொடர ஊக்குவிக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். வார இறுதி நாட்களில் தொடர்ந்து 15 வாரங்கள் என்ற வகையில் இலவச வகுப்புகள் நடைபெறுகிறது. கற்பனை அறிவை வளர்த்தல், சமூக அக்கறையுள்ள கதைக்கருக்களை உருவாக்குதல், குரல் வளம், நாட்டுப்புற பாடல்கள், இசைக்கருவிகள் வாசித்தல், நடனம் உள்ளிட்ட பயிற்சிகள், மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இன்று, புரசை மட்டுமன்றி சென்னை,மதுரை,பாண்டிச்சேரி, பங்களூர் மற்றும் பல ஊர்களிலிருந்தும் மாணவர்கள் வந்து இக்கலையை ஆர்வத்துடன் பயில்கின்றனர்.மேலும்,டெல்லியிலுள்ள தேசிய நடிப்பு கல்லூரி(national school of drama ) , பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் பல இடங்களிலுள்ள மாணவர்களுக்கு கூத்துப் பயிற்சி வழங்கியதுடன், வருடம் தொரும் சிங்கபூர் பாஸ்கர் நுண்கலை அகாடமியில் பயிற்சி வகுப்புகள் நடாத்துகிறேன். அம்மாணவர்கள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


4. இக்கலையை தொடர்ந்து வளர்க்கும் பணியில் உங்கள் பிள்ளைகளுக்கும் உங்களை போல ஆர்வமிருக்கிறதா?

ஐந்து தலைமுறையாக கூத்துக்கலையை மட்டுமே நம்பி வாழ்கின்ற எம் குடும்பம் வறுமையில் படுகின்ற கஷ்டங்களையெல்லாம் பார்த்து, என் பிள்ளைகள் வெவ்வேறு துறைகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.எனது மகன் இரசாயனவியல் படித்தவர். மகள்களில் ஒருவர்,கர்நாடக சங்கீதத்தில் கலாநிதி பட்டத்திற்காகப் படிக்கிறார்.மற்றவர் சித்த மருத்துவத்தில் பட்டப்படிப்பு படிக்கிறார்.இளைய மகள் பரதநாட்டிய கலைஞர்.இவர்களில் ஒருவராவது இக் கலையை வளர்க்கும் பணியில் வருங்காலத்தில் ஈடுபட வேண்டும் என்பதே என் கனவு.



5.தங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி?

<img src="purisaikannappasambandan.jpg"alt="purisaikannappa sambandan">
சங்கீத நாடக அகாடமி விருது 


2002 ஆம் ஆண்டு தமிழ் நாடக அறிஞர் எனும் விருதும், 2004ஆம் ஆண்டு தக்ஷின சித்ரா எனும் விருதும், சென்னை தூர்தர்ஷன் பொதிகை விருதும், சிங்கப்பூர் அரசினால் நிருத்திய கலா நிபுணர் விருதும் வழங்கப்பட்டது. முக்கிய விருதுகள் என்றால், 2012ம் ஆண்டு, இந்திய கூத்துக்கலைக்கான பிரிவில் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது.1995 ம் ஆண்டு, தமிழ்நாடு அரசினால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்று.



6.சினிமாவில் நடித்த அனுபவம்?

காவல் தெய்வம்,கண் சிவந்தால் மண் சிவக்கும்,ஆசை,பாரதி ஆகிய படங்களில் தெருக்கூத்து கலைஞராக நடித்துள்ளேன்.



7.கூத்துக் கலைஞர்கள் சந்திக்கும் பொருளாதார ரீதியிலான சவால்கள் என்ன? அரசினால் உதவி தொகை ஏதேனும் வழங்கப்படுகிறதா?

கூத்தினை பொருத்தவரை வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே கூத்து நிகழ்வுகள் நடைபெறும் என்பதால் ,உழைத்த பணத்தை வைத்துதான் அடுத்த ஆறு மாதங்களும் சமாளிக்க வேண்டும்.நிலையான வருமானமோ, அரசாங்கத்தினால் கூத்துக் கலைஞர்களுக்கான கொடுப்பனவுகளோ வழங்கப்படுவது இல்லை.அன்று முதல் இன்று வரை இதிகாசங்களையும் சமூக கருத்துக்களையும் மக்களிடம் சேர்க்கின்ற இக்கலையை வாழ வைக்கின்ற பாரம்பரிய கூத்துக்கலைஞர்கள் சொல்லமுடியாத வறுமையில் வாழ்கின்றனர்.மக்களை மகிழ்விக்கும் எங்களை அரசு மகிழ்விக்க முன்வரவில்லை என்பதுதான் உண்மை.


 

8.இத்துணை சவால்களுக்கு மத்தியிலும் இக்கலையை கைவிடாததற்கான காரணம் என்ன?

நாம் அதீதமாக நேசிக்கும் ஒன்றை எந்த சூழ்நிலையிலும் கைவிடக்கூடாது என்பது என் தந்தையின் வாக்கு.கூத்துக் கலையை தெய்வமாக ஆராதித்து, அதை மட்டுமே நம்பி வாழ்நாளைக் கழித்த எங்கள் பரம்பரை மட்டுமல்ல எல்லா கூத்துக்கலைஞர்களும் தமக்கான அங்கீகாரம் கிடைக்காத போதும், வறுமையை புறம்தள்ளி அகம் முழுதும் இந்த கலையை வாழ வைக்கவே போராடிக்கொண்டிருக்கிறோம்.உலகம் முழுதும் இக்கலைக்கு நிலையான அங்கீகாரமும், கீர்த்தியும் கிடைப்பதுவே என் அவா.அதுவரை என் சேவை தொடரும்.

<img src="therukoothu.jpg"alt="therukoothu">
          புரிசை கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து மன்ற நாடக கலைஞர்கள் 

   


9.கூத்து போன்ற பல பண்டைய மகிழ்கலைகள் தம் அடையாளத்தை இழந்து, அழிவடையும் நிலையில் இருப்பதற்கான கருதுகிறீர்களா?

காலத்தின் மாற்றத்தாலும் பொருளாதார,சமூக மற்றும் நவீன கலாசாரமோகம் போன்ற பரிணாம வளர்ச்சியினால் மக்கள் ஈர்க்கப்பட்டதன் காரணமாக நம் சான்றோர் போற்றிய கலைகளை மறந்துவிட்டார்கள் என்றுதான் செல்லவேண்டும்.கூத்தின் வழியாக பிறந்த கலைகளை ஆதரிக்கும் நாம் இக்கலையை கேலிக் கூத்தாக மட்டுமே பார்க்கிறோம்.இன்று சினிமாவின் பாரிய வளர்ச்சியின் முன்பு தோற்று போன இக்கலை ,அங்காங்கே நடைப்பெறுகிறது.

பிற வட நாட்டு கலை வடிவங்களை பயின்று பேணி காக்கின்ற நாம் எமது தமிழ் பண்பாட்டின் அடையாளங்களை தெரிந்துக்கொள்ளக் கூட முயல்வதில்லை.அடுத்த தலைமுறையினர் இப்படியொரு கலைவடிவம்இருந்ததாக புத்தகத்தில் மட்டும் படித்துவிடும் சூழ்நிலை வரவே கூடாது.இதற்காக, அரசாங்கம் இக்கலையை அங்கீகரித்து, கலைஞர்களை ஆதரிக்கவேண்டும்.

பாடசாலை, கல்லூரி வழியாக, பண்பாட்டு கலைகள் பற்றி அறிவூடப்படவேண்டும்.கலைசார்ந்த புரிதலை ஏற்படுத்த வேண்டும்.கிராமிய கலைப் பயிற்சி மையங்களை நிறுவி ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்.தொழில்வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.அரசாங்கமத்தினால், நம் பண்டைய மகிழ்கலைகள் ஆவணப்படுத்தப்பட்டு, அவை அரங்க மயமாக்கப்பட வேண்டும்.

பிற மொழி ,பிற கலை மீதுள்ள மோகம் தணிந்து, நம் பாரம்பரியம் போற்றும் கூத்துப் போன்ற மகிழ் கலைகளை வாழ வைப்பது எம் அனைவரதும் கடமையாகும்.