Advertisement

Responsive Advertisement

இனிக்கும் கரும்பின் கதை...கசக்கிறது இங்கே!





அந்த உச்சி வெயிலில் கைகளில் இரண்டு தூக்குப் போணிகளோடு மீண்டும் கரும்புத் தோட்டத்திற்குப் புறப்பட்டாள் பவானி.அன்றைய நாள் கரும்பு தோட்டத்தில் வேலைசெய்த களைப்பு முகத்தில் அப்படியே தெரிந்தது."அம்மா நானும் உன்னோடு வருகிறேன்"என்று அடம்பிடித்த தன் மகன்  ரமேஷ் குமாரையும் அழைத்து கொண்டு கரும்பு தோட்டத்துக்கு வந்து சேர்ந்தாள். பசியோடு காத்திருந்த பச்சையப்பனுக்கு,மனைவி கொண்டுவந்திருந்த தயிர் சாதமும்  ஊறுகாயும் அமிர்தமாக இருந்தது."அறுவடை காலம் என்பதால் காலையிலிருந்து தண்ணீர்க் கூட குடிக்க முடியல,கரும்புகளை வெட்டி,அதை  கட்டு கட்டாக் கட்டி வச்சுட்டோம்.லாரி வந்ததும் கரும்புகளை ஏத்தணும். சீக்கிரமா சாப்பிட்டு வேலைய ஆரம்பிக்கணும்" என்கிறார் பச்சையப்பன்.




பச்சையப்பன் இந்த கரும்புத் தோட்டத்தில் கடந்த 8 வருடமாக வேலை செய்யும் விவசாயி."வந்தவாசியில் இருக்கும் இந்த 7 ஏக்கர் கரும்புத் தோட்டத்தில் 21 விவசாயிகள் வேலை செய்றாங்க.தினக்கூலியாக 50 ரூபா 

முதல் 150 ருபாய் வரை தராங்க.நாம வெட்டும் கரும்புகளை பொருத்து தினக்கூலி வேறுபடும்.இப்போ அறுவடைக் காலம் என்பதால கொஞ்சம் கடுமையாக உழைக்கவேண்டி இருக்கு.ஆனால் நம்ம உழைப்புக்கு இந்த கூலி போதாதுங்க"என்கிறார் வருத்தத்துடன்.


<img src="karumbu.jpg"alt=karumbu kattu"/>
 கரும்புகள் 


இந்தியாவின் சக்கரை உற்பத்திக்கு பங்காற்றும் முக்கிய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு.தமிழ் நாட்டில் சக்கரை உற்பத்தி செய்யும் இடங்களில் வந்தவாசியும் இடம்பெறுகிறது.இங்கு இருக்கும் கரும்பு தோட்டங்களில் விளையும் கரும்புகள் யாவும் செய்யார் ஆலைகளுக்கு அனுப்பபடுகிறது.ஆலைகளுக்கு அனுப்பப்படும் கரும்புகளின் டான்களுக்கு ஏற்ப விலை நிர்ணயக்கப்பட்டு வருமானம் ஈட்டுகின்றனர் கரும்பு தோட்ட உரிமையாளர்கள்.மறுபக்கம் கரும்புத் தோட்டத்தில் கடுமையாக உழைக்கும் விவசாயிகளின் நிலையோ கண்ணீர் கதைதான்.


" கரும்பு ஒரு வருஷத்துக்கான பயிர்.ஒவ்வொரு ஆண்டும் மாசி மாசம் கரும்பு நடவு பண்ணி 30 நாட்கள் கழிச்சு களை எடுப்பதுதான் வழக்கம்.அதுக்கு அப்புறம் சோகை உரிப்பு நடக்கும்.அது வரை களை எடுக்கணும்.வருடத்தின் 6 மாதங்கள் மட்டுமே எங்களுக்கு இங்கு வேலை இருக்கும்.அடுத்த 6 மாதங்கள் வேறு ஏதாவது வேலைத் தேடவேண்டும்.இந்த ஒரு நாள் கூலிய வச்சு சமாளிக்க முடியாம ரொம்ப கஷ்டப்படறோம் என்கிறார் இங்கு வேலை செய்யும் சக்திவேல்.

மேலும் அவர் கூறுகையில் "கரும்பு விளைச்சலுக்கு  நிறைய தண்ணீர் தேவை.இங்க விளைச்சலுக்கு தண்ணீரும் இல்ல.இந்த கிராமத்துக்கே 3 தண்ணீர் பம்புகள் மட்டும் தான் இருக்கு." என்கிறார்.அரசாங்கத்திடம் பல முறை முறைப்பாடுகள் செய்தும் இங்கு தண்ணீர் வசதிகள் எதுவும் பெற்றுத்தர ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"சென்னை வலசரவாக்கத்தில் இருக்கின்ற சாக்லேட் கம்பெனிக்கு தான்  வேலைக்குப் போயிட்டு இருந்தேன்.இங்க இருந்து தினமும் சென்னைக்கு போக பஸ் கிடைக்கிறது ரொம்ப சிரமம்.ஓடிட்டு இருந்த பஸ்ஸயும் இடைநிறுத்திட்டாங்க.பிழைப்புக்கு வழிதேடனும்.அதான் கணவரோட இந்த கரும்பு தோட்டத்துக்கே வேலைக்கு வந்துட்டேன்"என்கிறார் பவானி.


"இங்கு வேலை செய்யும் விவசாயிகளின் பிள்ளைகள் வந்தவாசியிலிருந்து மிக தொலைவில் இருக்கும் அரசப் பள்ளிக்கூடத்துக்கு தான் போகவேண்டி உள்ளது.இரண்டு மணித்தியாலங்கள் நடந்தே  போகவேண்டி இருப்பதால் பெரும்பாலும் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதில்லை என்கின்றார்கள் இங்கு வேலை செய்யும் விவசாயிகள்.

" என் பையன் மதியழகன் 8 வது படிக்கிறான்.பொண்ணு 6 ஆவது படிக்கிறா. பள்ளிக்கூடத்துக்கு ரொம்ப தூரம் நடந்து தான் போகணும். கஷ்டப்பட்டாவது  நல்லா படிக்கட்டும்.நாளைக்கு என்ன மாதிரி அவங்களும்  கூலி தொழிலாளியா கஷ்டப்படக்கூடாது.இந்த கஷ்டமெல்லாம் என்னோடு போகட்டும்" என்ற மணிகண்டனின் கண்கள் கலங்கின. 




இந்த கரும்பு தோட்டத்தின் உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில்,"கடந்த 3 தலைமுறையா நாங்க கரும்பு உற்பத்தி தான் பண்றோம்.என் அப்பா இறந்த பின்,நான்தான்  முழுசா பொறுப்பு எடுத்து இந்த கரும்பு தோட்டத்தைப் பார்த்துகிறேன்.இங்கு வேலை செய்யும் விவசாயிகளுக்கு அவங்க உழைப்புக்கேற்றபடி ஊழியம் கொடுக்கிறோம்.அவங்க வெட்டும் கரும்பு எண்ணிக்கை படி தான்அன்றைய நாள் கூலி வழங்கப்படும்.நம்ம தோட்டத்தில் விளைற கரும்புகளை செய்யார் சக்கரை ஆலைக்கு தான்  அனுப்புறோம்.இது மாதிரி இன்னும் 10 தோட்டத்தில் இருந்து கரும்பு அங்க போகுது.ஒரு டன் கரும்புக்கு 2850 ரூபா வழங்கப்படும்.ஒரு நாளைக்கு மொத்தம் 10 டன் லருந்து 12 டன் வரைக்கும் நாம அனுப்புறோம்"என்கிறார் முருகதாஸ்.



உண்மையில்,ஒரு விவசாயின் கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லையென்றால் எந்த பயிரும் இந்த பூமியில் விழையாது.அவர்களின் உழைப்பைக்கும் வியர்வைக்கும் உரிய ஊதியம் வழங்கப்படுவதும், பயிர் செய்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதும் அந்த நில உரிமையாளர்களின் பொறுப்பாகும். கடந்த பல தசாப்தங்களாகவே கரும்பு உற்பத்தியாளர்களுக்கு உதவிட அரசும் போதிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்பதே உண்மை.இனிக்கும் கரும்பின் உற்பத்திக்காக உழைக்கும் விவசாயிகளின் வாழ்க்கையோ என்றுமே கசந்து கொண்டு இருப்பதுதான் நிதர்சனம்!









Post a Comment

0 Comments