Advertisement

Responsive Advertisement

சுதந்திர சுவாசக் காற்று வீசுகிறது!

காந்தி மண்டபத்தின் வெளிப்புறத் தோற்றம் 

"ஒரு குரங்கு கண்களை மூடி இருக்கு, இன்னொன்று காதுகளை  மூடி இருக்கு, மூன்றாவது குரங்கு வாயை மூடி இருக்கு.ஏன் தாத்தா?" என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் குட்டி பையன் கிஷோர்."கண்களை மூடிய குரங்கு நாம் கெட்டதை பார்க்கக் கூடாது என்று சொல்கிறது,காதுகளை மூடி இருக்கும் குரங்கு நாம்  கெட்டதைக் கேட்க கூடாது என்றும் வாயை மூடிய அந்த குரங்கு கெட்டதை நாம் பேசக்கூடாது என்றும் சொல்கிறது.இதை நமக்கு சொல்லிக்கொடுத்தவர் நம்ம காந்தி தாத்தா"" என்று அருகில் இருந்த காந்தி தாத்தாவின்  சிலையைக் காண்பித்து தன் பேரனுக்கு விளக்கினார் நடேசன்.வயது அறுபத்தைந்து இருக்கும்,வெள்ளை வேஷ்டியும் வெள்ளை சட்டையும்  அணிந்தபடி கையில் ஒரு குடையோடு தன் பேரனுக்கு காந்தியத் தத்துவத்தை விளக்கிய அவருக்கு காந்தி மண்டபம் ரொம்ப பரிச்சயமான இடம்.வார இறுதி நாட்களில் தன் நேரத்தை அதிகமாக இங்கு செலவிடும் அவர், கிஷோரை இங்கு அழைத்து வருவது இதுதான் முதல் முறை."நம்ம நாட்டின் வரலாறு தெரியாமல் வேறு எதை படிச்சாலும் அதில் அர்த்தமே இல்லைனு நினைக்கிறேன்.குழந்தைகளும் மாணவர்களும் நம்ம நாட்டின்  வரலாற்றைத் அறிந்துப் படிக்கணும்.காந்தி மண்டபத்திற்கு வரும் ஒவ்வொருவரும் இங்கு ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டுதான் செல்வார்கள்" என்கிறார் நடேசன்.


மூன்று குரங்கு சிலைகள் 



காந்தி அரங்கத்தின் வெளிப்புற தோற்றம் 

சென்னை அடையாறு பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில்  எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது காந்தி மண்டபம்.இந்திய தேசத்தை அந்நியர் ஆட்சியிலிருந்து மீட்டெடுப்பதற்காக அகிம்சை வழியில் போராடிய அண்ணல் காந்தியின் அர்ப்பணிப்பை  போற்றும் விதமாக கட்டப்பட்ட நினைவிடம் இது.1956 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் நாள் அன்றைய முதலமைச்சர் சி.ராசகோபாலச்சாரியால் இந்த மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.பின்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினால் 2014 ஆம் ஆண்டு சுமார் 12 கோடி ரூபா செலவில் மண்டபம் புதுப்பிக்கப்பட்டது. வெள்ளைக் கோபுர அமைப்பில் கம்பீரமாக காட்சியளிக்கும் காந்தி மண்டபம், சுமார் 14 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப் பெற்றுள்ளது.

காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள அவரின் உருவ சிலைகளும் புகைப்பட கண்காட்சியும் இங்கு வருகின்ற மக்களை வெகுவாக ஈர்க்கின்றன.சுதந்திர போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் காந்தியின் அரசியல் சந்திப்புக்களின் போது எடுக்கப்பட்ட வரலாற்று புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் இங்கு உள்ள காந்தி நூலகத்தில் காந்தியின் சத்தியசோதனை உட்பட அரிய பல நூல்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது மற்றுமொரு சிறப்பம்சமாக சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு தனிதனியே மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காந்தி நூலகம் 

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அண்ணல் காந்தியின் சிலை 

சுதந்திர போராட்டத்தின் போது சிறையில் காந்தி 


காந்தியின் இறுதி ஊர்வலம் 

காந்தியடிகளின் புனித உடல் 

தியாகிகள் மணிமண்டபம் 


காமராஜர் நினைவகம் வெளிப்புறத் தோற்றம் 

"இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியின் சுதேசி இயக்க குறியீடாகப் பயன்படுத்தப்பட்ட கை நெசவு ராட்டினமும்,அவர் பழனி ஆண்டவரை தரிசிக்க உபயோகித்த மேனாவும் இங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.அது மட்டுமின்றி செக்கு இழுத்த வ.உ.சிதம்பரனார் மணிமண்டபம் பக்கத்திலேயே அவர் கோயம்பத்தூர் மத்திய சிறையில் இழுத்த செக்கு, இங்கு நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்படுகிறது.இது எல்லாம் நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷங்கள்"என்கிறார் சமூக ஆர்வலர் சக்திவேல் ராஜ்.

பழனி ஆண்டவரை தரிசிக்க காந்தியடிகள் உபயோகித்த மேனா 

"இங்க நான் ஏழு வருஷமா வேலை செய்கிறேன்.சினிமா தியேட்டர் இல்லைனா கடற்கரைக்கு போவது போல இங்கு கூட்டம் அலைமோதுவது இல்லை.எப்போதாவதுதான் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.மற்ற நாட்களில் உள்ளூர் கல்லூரி  மாணவர்களும்,கொஞ்சம் பார்வையாளர்களும் வருவதுண்டு.வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இந்த இடத்தை பக்தியோடு பார்வையிட்டு புகைப்படங்கள் எடுத்துச் செல்கிறார்கள்.உண்மையில் நம் சென்னைவாழ் மக்கள் பாதி பேருக்கு இப்படி ஒரு மண்டபம் இருப்பதே தெரியாது என்று நினைக்கிறேன்..இங்கு இருக்கும் அரங்கத்தில் பொது விழாக்களும், குறிப்பாக கலாச்சார உரையாடல்களுக்கும் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.அப்போது தான் மக்கள் கூட்டம் அதிகமா இருக்கும்" என்கிறார் துப்பரவுப் பணியாளர் சுமதி.

"எதையும் மனப்பாடம் செய்து படிக்காமல் இயற்கையோடு இணைந்து தெளிந்து உணர்ந்தும் படிக்கவேண்டும்" என்ற கல்விக் கொள்கையின் மூலம் எத்தனையோ இந்திய குழந்தைகளை வழிநடத்தியவர் வங்க இலக்கிய மேதை ரவீந்திரநாத் தாகூர்.அவர் வழியில் நம் தேசத்திற்காக போராடிய தலைவர்களை வெறுமனே புத்தகங்களில் காண்பித்து  அவர்களின் பெயர்களை மனப்பாடம் செய்வதை விடுத்து,அனுபவ பாடமாகத் அறிந்துக் கொள்ள மாணவர்கள் இங்கு வரவேண்டும்.இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த தேச தலைவர்களை அறிவதும் அறிந்ததை பலர் அறிய செய்வதும் நம் அனைவரினதும் கடமையாகும்.





Post a Comment

0 Comments