<img src="irular.jpg"alt="irular tribe"/>
சீமெந்து கற்களை காயவைத்தல் 

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எல்லாமே சீமெந்து கற்கள்.பார்ப்பதற்கு சாம்பல் நிற சாக்லேட் துண்டுகளை அடுக்கி வைத்தது போல இருந்தது.நீள்சதுர வடிவில் அச்சில் வார்க்கப்பட்ட ஒவ்வொரு சீமெந்து கல்லும் நேர்த்தியாக சமப்படுத்தப்பட்டு வெயிலில் காயவைக்கப்பட்டிருந்தது."15 வருஷமா கொத்தடிமையா இருந்த நமக்கு இப்படி சுயமா உழைச்சு வாழுற வழியை காட்டினது இந்த மக்கள் மன்றம் தாங்க"என்றபடி  சீமெந்துக் கற்களை சமப்படுத்தி காயவைத்தார் ராசமணி. 

<img src="irular tribe.jpg"alt="irular tribe"/>

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மக்கள் மன்றம்,சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்த பட்ட மக்களுக்கான அமைப்பாகும்.இந்த அமைப்பின் மூலமாக பல ஆண்டுகளாக அரிசி ஆலைகளிலும்,செங்கல் ஆலைகளிலும் கொத்தடிமைகளாக இருந்த இருளர் பழங்குடியின மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.மீட்கப்பட்ட இருளர் மக்களுக்கு மறுவாழ்வு அளித்து,புதிய வாழ்வுக்கான நம்பிக்கையை வழங்கியுள்ளது மக்கள் மன்றம். 



"கிட்டதட்ட 26  இருளர் பழங்குடி குடும்பங்களை மீட்டு,இங்கு அழைத்து வந்தோம்.மீட்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உடனடி நிவாரண தொகையாக தலா 1000 மும், பின்னர் ரூ 19000 மும் வழங்கியது.வழங்கப்பட்ட நிவாரண  தொகையைக் கொண்டு இந்த சீமெந்து கல் உற்பத்தி சுயதொழிலை ஆரம்பிச்சாங்க.இப்போ இவர்கள் தான் இங்கு தொழிலாளர்கள்  உரிமையாளர்கள்  எல்லாமே"என்கிறார் மக்கள் மன்றத்தின் நிர்வாகியான செல்வி கீதா.



"இருளர் பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வாழ்ந்ததால் மீட்டு வந்த உடனேயே புனர்வாழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தோம்.நடத்தை மாற்றம்,நாளாந்த பணிகள் யாவும் கண்காணிக்கப்பட்டு நான்கு கட்டங்களாக புனர்வாழ்வு வழங்கப்பட்டது.அதன் பின் அவர்களுக்கென ஒரு சுயதொழில் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் சீமெந்து கல் உற்பத்திக்கான பயிற்சி நெறி வழங்கினோம்.நீண்ட நாள் பயிற்சியின்
பின் தற்போது தமக்கென ஒரு தொழில் மற்றும் வருமானத்துடன் இங்கு 
சுதந்திரமாக வாழ்கின்றனர்" என்கிறார் மகேஷ்,மக்கள் மன்றத்தின் நிறுவனர்.


மக்கள் மன்றத்தில் வாழும் இருளர் பழங்குடி மக்களுக்கு தனி வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.தமக்கென ஒரு வசிப்பிடம்,வருமான மீட்டும் தொழிலோடு மக்கள் மன்றத்தின் ஒர் அங்கமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களின் பிள்ளைகள் அனைவரும் காஞ்சிபுரம் அரச பள்ளியில் கல்விக் கற்பதுடன்,நன்கு படித்த பிள்ளைகள் இன்று வெளியூர்களில் வேலை செய்வது குறிப்பிடத்தக்கது.

<img src="irular-palankudi-makkal.jpg"alt=irular-palankudi"/>

<img src="irular tribe"alt="irular tribe"/>

"செங்கல்பட்டு பக்கத்துல கீழ்ப்பாக்கம் தாங்க எங்க ஊரு.அங்க ஒரு ரைஸ் மில்லுல வேலை செஞ்சோம்.மெஷின் வேலைங்க.நெல்லு காயவைக்கணும்,
வேக வைக்கணும்,ராத்திரி எல்லாமே கண் முழிக்கணும்.20 வருஷமா அங்க வேலை பாத்ததுல எனக்கு நடக்கவே முடியாம போயிருச்சுங்க.எங்கல பத்தி தகவல் தெரிஞ்சி இந்த மக்கள் மன்றம் அக்கா தான் எங்கள மீட்டுட்டு வந்தாங்க.இங்க எங்களுக்கு வீடு கட்டி தந்துருக்காங்க.என் பையனும் மருமகளும் இங்க  சீமெந்து கல் செஞ்சு விற்கிறாங்க.கிடைக்கிற வருமானத்துக்காக வைச்சு இங்க நிம்மதியா இருக்கோம்" என்கிறார் முதியவர் சுந்தரம்மா.

<img src ="irular-tamilnadu"alt="irular tamilnadu"/>
பொன்னன் 
"இதுவரைக்கும் 10 பாம்புகள் பிடிச்சுருக்கேன்.நல்ல பாம்பு,சார பாம்புனு எல்லாமே...பாம்பு பிடிப்பதுதான் எங்க பரம்பரை தொழில்.ஆனா அரசாங்கம் தடை செய்ததுக்கு அப்பறமா எங்களுக்கு பிழைக்க வழி இல்லாம போயிடுச்சு.அப்பறம் அரிசி மில்லுல கொத்தடிமை வாழ்க்கை தான்" என்று தங்களின் வாழ்க்கை கதையை கூறும் பொன்னன் செங்கல்பட்டு மில் ஒன்றில் 15 வருடங்கள் கொத்தடிமையாக வாழ்ந்தவர்.

"அரிசி மில்ல வேலைபார்க்குறப்போ ரொம்ப கொடுமைப்படுத்துனாங்க.ஒரு நாள் வேலை செய்யலனா 10 பைசாக்கூட தரமாட்டாங்க.  
பல நாள் சாப்பாடே இல்லாம அடி வாங்கி கஷ்டப்பட்டிருக்கோம்.எப்படியோ இவங்களுக்கு தகவல் கிடைச்சு எங்கள மீட்டுட்டு வந்தாங்க.இப்போ நாங்க யாருக்கும் அடிமையில்லை" என்று கண்ணீரோடு பேசும் பொன்னனின் வேண்டுகோள் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து இருளர் பழங்குடியின மக்களுக்கும் அரசாங்கம் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே.

இந்திய அரசியலமைப்பின் படி எல்லா தனிநபரும் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ உரிமையுண்டு.கொத்தடிமையாக ஒரு நபர் நாடத்தப்படுவது சட்டபடி குற்றமாகும் என்பதை உணர்த்தும் படியாக எம் நாட்டின் இருளர் எனும் ஆதிக்குடி மக்களை மீட்டு சுதந்திரமான வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்தியுள்ள காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தின் பணி மென்மேலும்தொடரட்டும்!